சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது மிகவும் தவறான உதாரணம் ஆகிவிடும் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிறையில் இருக்கிற செந்தில் பாலாஜியை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அழைத்ததே தவறு என்கிற நிலையில், அந்த மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளரையே மற்றொரு சிறப்பழைப்பாளராக அழைத்திருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.
இனி சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்த இந்த நிகழ்ச்சி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம் அவர்கள் இந்த தடகள சங்கத்தின் தலைவர். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் இந்த சங்கத்தின் துணை தலைவராக உள்ளார்.
சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லையென்றால், இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், தெரிந்தே அனுமதித்துள்ளார்கள் என்றால் தமிழகத்தின் அரசியல் அவலத்தை உணர்த்துவதோடு, அவர்களின் தலைமை பண்பையும் கேள்விக்குறியாக்கும் என தெரிவித்துள்ளார்.