ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் அதிரடி

மோடி பெயர் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையானது. இதனால், ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரத் நீதிமன்றம் தனக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை என்றும், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபரை தேர்ந்தெடுத்த தொகுதி வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com