தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைவெறியுடன் பேசிய அயோத்தி சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியா பண்முகம் கொண்ட நாடு.இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கையை இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.
பாஜக அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. ஆகையால் 5 சுங்கச்சாவடிகளை இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும் கொசு, காலராவை ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை திரித்து, பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அயோத்தி சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பற்றி கவலைப்படாத மோடி அரசு, சனாதனம் பற்றி கவலைப்படுகிறது” என குற்றம்சாட்டினார்.