சேலம்: 'பேனாவுக்கு 82 கோடி, மக்கள் பசிக்குப் பணமில்லை' - அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்காத காரணத்தால் மக்கள் வருகை குறைந்து கொண்டே வருகிறது. பேனா வைக்க பணமுள்ளது, ஆனால் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்க பணமில்லையா?' என முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலையை தி.மு.க உள்ளிட்ட ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அஞ்சி நடுங்கி அதை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுவது போல பேசி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கின்றனர். புதிய திட்டங்கள் ஏதும் இல்லை.

ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் என்று அ.தி.மு.க-வில் உள்ள யாரும் சொல்லவில்லை. தமிழ்நாட்டின் நிதியமைச்சரே சொல்லியுள்ளார். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக வாய்திறக்கவே இல்லை.

கடலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தி.மு.க அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால், மக்கள் விழிப்போடு அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கஞ்சா விற்காத இடமே இல்லை. கடந்த ஆண்டு மானிய கோரிக்கை புத்தகத்தில் பள்ளி கல்லூரிக்கு அருகாமையில் 2,138 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டது வெறும் 148 பேர் தான். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க ஆட்சியில் வரிமேல் வரி போட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளனர். தி.மு.க என்பது குடும்ப ஆட்சி. கருணாநிதிக்கு மணி மண்டபம் அமைப்பது சரி. மக்கள் வரிப்பணம் ரூ. 82 கோடியை எடுத்து எதற்கு கடலில் எழுதாத பேனா வைக்கிறீர்கள்?

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்காத காரணத்தால் மக்கள் வருகை குறைந்து கொண்டே வருகிறது. பேனா வைக்க பணமுள்ளது, ஆனால் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்க பணமில்லையா?' என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com