சேலம்: 'ஒரே ஒரு ஆடியோவால் தி.மு.க அரசு ஆடிப்போய்விட்டது' - எடப்பாடி பழனிசாமி பேட்டி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'ஒரே ஒரு ஆடியோவால் தி.மு.க அரசு ஆடிப்போய்விட்டது. ஒரு விக்கெட்டும் போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க அமைச்சரவையே ஆடிப்போயிருக்கிறது' என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம், ஓமலூரில் உள்ள புறநகர் அ.தி.மு.க அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது, தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் பலர் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'எனது பெயரில் எந்தச் சொத்தும் இல்லை. நான் எந்த ஒரு பெரிய தொழிலும் செய்யவில்லை. விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன்.

எந்தச் சொத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் பொய்யாக வழக்கு போட்டுள்ளார்கள். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சி.எஸ்.கே. அணி விளையாடியபோது, ஓ.பி.எஸ். மேட்ச் பார்க்க போனவர் மேட்ச் மட்டுமே பார்க்கவேண்டும்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனைச் சந்தித்துள்ளார். இதிலிருந்தே அவர் தி.மு.க-வின் கைக்கூலி என்று நிரூபணம் ஆகியுள்ளது.

தி.மு.க ஆட்சியின் ஊழல் வெளிப்பாடுதான் தற்போது நடந்திருக்கும் அமைச்சரவை மாற்றம். அப்படி இல்லையெனில் எதற்காக அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும்?' என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com