'கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்' என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ் சேலம் ஆவின் பால் பண்ணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, பால்வளத் துறையின் சார்பில் விவசாயிகள் மற்றும் பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரூபாய் 34 லட்சம் மதிப்பிலான ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகன சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, ஆவின் பால் பண்ணை வளாகத்தில் பால் சேமித்தல் பாக்கெட் செய்தல் ஐஸ்கிரீம் தயாரிப்பு பால் பவுடர் தயாரிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், 'தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் கறவை மாடுகள் வழங்கவும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது நியாயமானது, உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உரிய ஆய்வுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும்.
ஆவின் என்பது சேவை அடிப்படையிலேயே இயங்கும் நிறுவனம் என்பதால் பால் உற்பத்தியாளர்கள் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். கூடுதல் விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் தனியாருக்கு பாலை வழங்க வேண்டாம், அது நிரந்தரமற்றது. முறையான உரிமம் இல்லாமல் கொள்முதல் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.