500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது இமாலயப் பிழை. அதை தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொள்கிறார்கள் என்பது எனக்கு திருப்தியளிகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனை இணைந்து ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், ‘’கருப்புப் பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி ஆயிரம் 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தனர். 2,000 ரூபாய் நோட்டை அறிவித்தது மிகப்பெரிய பிழை. அதை மக்கள் புறக்கணித்தார்கள்.
சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்தப் பணம் அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம் உள்ளது. அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும். ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்கள். அதுவே மிக்க மகிழ்ச்சி’’என்று அவர் கூறினார்.