சட்டமன்றத்தின் லீடர் நான்தான் என்பதால் அங்கு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை நான்தான் கவனிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை அணைக்கட்டு பகுதியில் ரூ.3.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு மனுநீதி நாள் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “சட்டமன்றத்தின் லீடர் நான்தான் என்பதால் சட்டமன்றத்தை கவனிக்க வேண்டும். குறிப்பாக, ஆளுநரைக் கவனிக்க வேண்டும்.
அதேபோல சட்டமன்றத்தில் ஆளுநர் தவறாக பேசும்போது அதிகாரிகளிடம் 'அவர் தவறான விஷயங்களைச் செய்கிறார்’ எனச் சுட்டிக்காட்டினேன்”. தமிழக அரசு தயாரித்த உரையை படிப்பது தான் ஆளுநரின் தலையெழுத்து. பேரவையில் இருந்து ஜல்லிக்கட்டு காளை ஓடுவதுபோல ஆளுநர் ஓடினார்.
மசோதாவை நிலுவையில் வைக்க அது ஒண்ணும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை. நீ படிச்சுதான் ஆகனும்.. அதான் உன் தலையெழுத்து. ‘ரவி இத கொஞ்சம் படிங்கனு’ சொன்ன மாதிரி ஆளுநர் சொல்றாரு. அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் ரவி மதிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர் பென்ஷன் குறித்து நகைச்சுவையாக பேசிய அவர், கடந்த ஆட்சி காலத்தில் 38 ஆயிரம் முதியோர்களுக்கு பென்ஷன் வழங்கியதாகவும், தற்போது பென்ஷன் வழங்க வரைமுறை உள்ளதால் அதிகாரிகள் திணறுவதாகவும் கூறிய அவர், முதியோர் பென்ஷன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனிப்பட்ட முறையில் இதற்காக தனி கூட்டத்தை நடத்த ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சில வரிகளை தவிர்த்த நிலையில், அதற்கு எதிரான தீர்மானம் முதலமைச்சர் ஸ்டாலினால் உடனடியாக கொண்டுவரப்பட்டது. அந்த சமயத்தில் நடந்ததைத்தான் அவை முன்னவராகவும் இருக்கும் துரைமுருகன் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.