’’தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் இப்போது கஞ்சாவை தேடி காவல் நிலையங்களுக்குத்தான் வருகிறது’’என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், "ஆன்மீகம் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டுகிறது என்று பிரதமர் மோடி அடிக்கடிப் பேசி வருகிறார். ஆன்மீகமும், மத நம்பிக்கையும் எல்லோருக்கும் பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது.
தூத்துக்குடி எம்பி கனிமொழி, தூத்துக்குடி பனிமயமாதா கோவில் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அந்த கோயில்களில் நடக்கும் திருவிழாக்களின் போது அவர் ஏன் இது போன்ற கோரிக்கை வைக்கவில்லை. எல்லா மத விழாவிற்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தால் மகிழ்ச்சி. இத்தகைய ஏற்றத்தாழ்வும், பாராபட்சமும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருக்கக் கூடாது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்கள் பற்றி பேசுவது என்றாலே தவறு என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. அது தவறு. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது கிடையாது. இந்த பாரபட்சம் இல்லாத ஒரு ஆன்மீக நிலை நமக்கு இருக்க வேண்டும். பிரதமர் சொல்வது போல நமது ஆன்மீகம் இன்று உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அதிக கோயில்கள் இருக்கும் இடமாக தமிழகம் இருப்பது மகிழ்ச்சி. கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிடுவார் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிடுகிறது. தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் இப்போது கஞ்சாவை தேடி காவல் நிலையங்களுக்குத்தான் வருகிறது.
கஞ்சாவை பிடிக்கப்படும்போது இருந்த அளவை விட நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை காட்டுவதால் இருவர் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்பது இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பிளஸ்- 2 படிக்காதவருக்கு பி.எச்.டி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகங்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமர் ஒரு வருடத்தில் ஒரு கோடி மரம் நட வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. இது ஒரு மதத்தினருக்கு எதிரான சட்டம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். நாம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும் என்று சமூக நீதிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
சமூக நீதிதான் பொது சிவில் சட்டம். பொது சிவில் சட்டம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு சட்டம். இது தவறாக முன்னிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்" என்றார்.
அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும், அரசியலுக்காக அவர் நடிப்பதை ஒத்தி வைக்க இருப்பதாக சொல்லப்படுவது குறித்தும் கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், இரண்டு கைகளையும் தூக்கி கும்பிட்டவாரு நன்றி சொல்லி சென்று விட்டார்.