ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், இச்சிபுத்தூர் கிராமத்தில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.
அந்தக் கடையை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி திறப்பு விழா நடத்தச் சென்றுள்ளார். ஆனால், அதற்குள் கடையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் பத்மநாபன் சென்றுவிட, எம்.எல்.ஏ.ரவி ஏமாற்றமடைந்தார். ஆனாலும், வெளியில் கட்டியிருந்த வாழை மரத்திற்கு ரிப்பன் கட்டி அதை வெட்டி விட்டு, ’’தி.மு.க.வினர் மக்கள் நலன் நினைக்காதவர்கள். மக்கள் விரோத அரசு நடந்து கொண்டிருக்கிறது’’என்று பேட்டியும் கொடுத்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தி.மு.க. சேர்மன் நிர்மலா சௌந்தரிடம் பேசினோம். ‘அது பஞ்சாயத்து யூனியன் கட்டிக்கொடுத்த கட்டிடம். அவர் சொல்லுகின்ற அன்று சேர்மன்கள் கூட்டம் சென்னை மறைமலை நகரில் நடந்தது. அன்று நான் ஊரில் இல்லை. மேலும் கடை கட்டி முடிக்கப்பட்டதும் கலெக்டருக்கு சொல்லிவிட்டோம். கலெக்டர் அமைச்சர் காந்தியிடம் சொல்லி திறப்பு விழாவிற்கு தேதி கேட்டுள்ளார்கள். இந்நிலையில் எம்.எல்.ஏ.ரவி வேண்டுமென்றே ஒரு ஷாமியானா பந்தலை போட்டு விட்டு, இரண்டு வாழை மரங்களை கட்டிவிட்டு அரசியல் செய்ய நினைக்கிறார் ’ என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சுந்தர்ராஜனும், ’எம்.எல்.ஏ. வரும் விஷயம் அதிகாரிகளான எங்களுக்கே தெரியவில்லை’ என்றார். அரசியல் பரபரப்புக்கு எதையும் செய்யலாமா என்று பொதுமக்கள் எம்.எல்.ஏ.ரவிக்கு மெஸேஜ் அனுப்பி வருகின்றனர்.
-அன்புவேலாயுதம்