ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், வழக்கறிஞர் சண்முகநாதன் உள்ளிட்ட 6 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் ஏப்.16-தேதி தனது வீட்டில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஆயுதங்களுடன் வந்த இருவரை அவரது வீட்டிலிருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அரிவாளால் வெட்டியதில் தரணி முருகேசனிடம் பணியாற்றும் ஊழியர் கணேசன் காயமடைந்தார்.
கொலை செய்ய முயன்ற சென்னையைச் சேர்ந்த கூலிப் படையினர் மோகன், சுரேஷ் இருவரையும் கைது செய்தது போலீஸ். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், வழக்கறிஞர் சண்முகநாதன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜ.கட்சியினர் அரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, டி.எஸ்.பி ராஜா ஆகியோர் நடத்திய விசாரணையில் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன், புதுவண்ணாரப்பேட்டை சுரேஷ் உள்ளிட்டோர் கூலிப்படையாகச் செயல்பட்டது தெரியவந்தது.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் அழைத்ததன் பேரில் அவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் காயமடைந்த கணேசன் அளித்த புகாரின் பேரில், மோகன், சுரேஷ், விக்னேஸ்வரன், வழக்கறிஞர் சண்முகநாதன், கதிரவன், கதிரவனின் ஓட்டுநர் பாலமுருகன் என்ற சேட்டை பாலா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த வழக்கறிஞர் சண்முகநாதனை தனிப்படை போலீசார் சென்னை விமானநிலையம் அருகில் கைது செய்தனர். இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க-வில் அரசியல் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது.