‘ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய விதிகளை வகுக்க வேண்டும்’ - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

‘ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய விதிகளை வகுக்க வேண்டும்’ - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான விதிகளை வகுப்பது தொடர்பாக விளக்கமான அறிக்கை அளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லி ராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், நிலம் வாங்கிய பின் காவல் துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட போது அதைத் தர மறுத்ததால் தங்களுக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருவதாகவும், அரசு அதிகாரிகளுக்குச் சட்டத்தின் பயத்தைக் காட்டினால் ஒழிய, அரசுத்துறைகளில் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com