தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மேல ஈரால் ஊராட்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் வசந்தா. ஊராட்சி மன்றத் துணை தலைவராக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் இருந்து வருகிறார்.
கடந்த ஓராண்டாக பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தவில்லை என கூறப்படுகிறது. வார்டு உறுப்பினர்களுக்கு பஞ்சாயத்தில் நடக்கும் வேலைகள் குறித்து எந்த தகவலும் தெரிவிப்பதில்லை.
வரவு-செலவு கணக்கு குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் தெரிவிப்பதில்லை என்று துணைத் தலைவர் மாரியப்பன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், ‘ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 70 லட்சம் ரூபாய் வரை ஊழல் செய்துவிட்டார்.
சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளில் முறைகேடு நடந்திருக்கிறது’ எனக் கூறி வார்டு உறுப்பினர்களோடு இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதுபற்றி பஞ்சாயத்து துணைத் தலைவர் மாரியப்பன் கூறுகையில், ‘பஞ்சாயத்து தலைவர் ஆகும் வரை வசந்தா ஒரு கூலித் தொழிலாளி. தலைவரான பிறகு அவரது நடவடிக்கைகள் அனைத்தும் மாறிவிட்டன. ஜெயிக்கும் வரை எங்களிடம் அன்பாக பழகியவர், பிறகு எங்களை எடுத்தெறிந்து பேச ஆரம்பித்து விட்டார்.
மேலும் ஒரு வருடமாக பஞ்சாயத்து கூட்டத்தைக் கூட்டவில்லை. பஞ்சாயத்தில் நடக்கும் பணி குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. கேட்டாலும் பதில் சொல்வதில்லை.
இதற்கிடையில் பஞ்சாயத்தில் நடக்கும் பணிகளில் 70 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. கூலி வேலை பார்த்தவர் இப்போது ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார். அந்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது?
அது பற்றி விசாரிக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர்கள் மதிக்காத பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்க வேண்டும்’ என்றார்.