‘‘மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது. மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்து விட்டோம். அதனால் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு அவர்களை பாதிக்காது’’ என தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தக்காளி, இஞ்சி, பூண்டு என காய்கறிகளின் விலை மட்டுமின்றி மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களை பேதிக்குள்ளாக்கி வருகிறது. தக்காளி விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பதால் கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது
வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மக்களுக்கு பேரிடியாக உள்ளது. கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து இருப்பது மக்களை கதி கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் விலைவாசி குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ள கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "சாதாரண கூலித்தொழிலாளி கூட தினமும் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்து விட்டோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாரளமாக உள்ளன. கட்டுமான தொழில்கள் ஆங்காங்கே நடக்கிற காரணத்தினால் மக்கள் மத்தியில் பணபுழக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், விலை வாசி உயர்வு காரணமாக மக்கள் அதற்கு பெரும் சிரமப்படும் மாதிரி இல்லை. வருவாயும் கூடுதலாக ஆகிறது. வருமானம் கூடுவதால் ஓரளவு சரியாகிறது. தக்காளி என்பது சீசன் பொருள். மழை காலத்தில், வெயில் காலத்தில் சீசனுக்கு ஏற்றார் போல் விளைகிறது. அது ஒரு 10 நாள்தான் இருக்கும். ஏற்றம் இறக்கம் எல்லாம் சாதாரணமாக போய்விடும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேஷன் கடைகள் மூலமாக அரசு தக்காளி வாங்கி மக்களுக்கு எளிதாக கொடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.
அமைச்சரின் இந்தப்பேச்சு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.