மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.1028 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.
அதற்கு அப்போதைய மின்சார துறை அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்ததோடு தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என குற்றம்சாட்டி இருந்தார்.
அறப்போர் இயக்கத்தின் புகார் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரூ.908 கோடிக்கு ஊழல் நடந்ததை கண்டுபிடித்தது.
இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் என மொத்தம் 10 பேர் மீது கடந்த 27.02.2023 அன்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் உள்பட அனைத்து தரப்பின் வாதங்களும் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கியதோடு சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.