'கார்த்திக் சிதம்பரத்தை கண்டித்துப் போஸ்டர்' ; காங்கிரஸ் களோபரம் - என்ன நடந்தது?

மானாமதுரை பகுதியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
'கார்த்திக் சிதம்பரத்தை கண்டித்துப் போஸ்டர்' ; காங்கிரஸ் களோபரம் - என்ன நடந்தது?

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகக் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்வானவர் கார்த்திக் சிதம்பரம். இவரது தந்தை பா.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவி வகித்து வந்தவர். கார்த்திக் சிதம்பரம் எம்.பி தான் மனதில் பட்டதைத் தயக்கமின்றி தெரிவித்து வந்தார். இதனால் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் அவருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. மேலும் தனது கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கை வலியுறுத்தி அவ்வப்போது, தங்கள் பகுதிக்கு வரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் மனு அளித்தும் வந்துள்ளனர். ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினரின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது கட்சி முன்னோடி தலைவர்களின் படங்களை லெட்டர் பேடிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மானாமதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்ட போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் கே.ஆர். இராமசாமி மற்றும் கார்த்திக் சிதம்பரம் என இரு கோஷ்டிகளாகச் செயல்படும் நிலையில், காங்கிரசாரின் கோஷ்டி மோதல் வீதிக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com