கரூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பாரதப் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால், 2019 - 20 ஆண்டுகளில் 91.23 லட்சம் டன்னாக இருந்த யூரியா இறக்குமதி, 2022 - 23 ஆண்டில் 74.86 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, இன்னும் 33% இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2025 ஆம் ஆண்டிற்குள், வெளிநாடுகளிலிருந்து யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும். மத்திய அரசு, விவசாயிகளுக்கு 2022-23 ஆண்டுகளில், ஹெக்டேருக்கு சுமார் ரூ.8,909 உர மானியமாக வழங்கியுள்ளது.
45 கிலோ யூரியா மூட்டைக்கான சந்தை விலை ரூ.2200 என்ற நிலையில், விவசாயிகளுக்கு அதே மூட்டை வெறும் ரூ.242க்கு வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது பாரதப் பிரதமர் மோடி, கிராம முன்னேற்றம், விவசாயம், இளைஞர்களுக்கான தொழில் மேம்பாடு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, மகளிர் மேம்பாடு என, நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
உலக நாடுகள் போற்றும் நம்பர் 1 தலைவராகவும், உலக நாடுகளின் வழிகாட்டியாகவும் மோடி விளங்குகிறார். ஆனால், நமது தமிழ்நாட்டில் ஒருவர் நம்பர் 1 என்று கூறிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் கள்ளச்சாராயத்தில் நம்பர் 1, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்பவர்களை கைது செய்து மிரட்டுவதில் நம்பர் 1, ஊழலில் நம்பர் 1 என்பதே உண்மை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஊழலற்ற ஆட்சி மூன்றாவது முறையாகத் தொடர்வதில், தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்தும், பா.ஜ.க சார்பில் பெருமளவில் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ய, தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகரஜ், கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் சோழன் பழனிச்சாமி மற்றும் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.