தூத்துக்குடி: நான்கு வழிச் சாலையில் மறியல் போராட்டம்- என்ன காரணம்?

ஆற்றில் நீர் வரத்து குறைந்து விட்டதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடியேற்ற முறை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
சாலை மறியல்

தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்டங்களில் எல்லையாக இருக்கும் வல்லநாடு பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு கடுமையான வெயில் அடித்து வருவதால் பாபநாசம் அணை வறண்டு காணப்படுகிறது. அதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்து விட்டதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடியேற்ற முறை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com