முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், முன்னாள் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவையும் இணைத்து ஒரு படத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த இராமச்சந்திரன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர். இயற்கை விவசாயம், இயற்கையின் மீது காதல், மண்ணின் மீது நேசம் என எல்லோராலும் மிகவும் அன்பான, பண்பான நபராக அறியப்பட்டவர் இந்த ராமச்சந்திரன். சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், முன்னாள் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவையும் இணைத்து ஒரு படத்தை வெளியிட்டு கேவலமான வார்த்தைகளால் வசை பாடி இருந்தார்.
இதுகுறித்து யார் எப்படி புகார் கொடுக்கலாம் என்பது பற்றி தி.மு.க-வில் ஆலோசனை நடந்து கொண்டே இருந்தது. இறுதியில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 37 வயதான சுதா என்பவர் புகார் அளித்தார். இவரது பதிவு தன்னைப் போன்ற சமுதாயப் பணியில் இருக்கும் பெண்களின் மரியாதையையும், உரிமையையும் பறிப்பதாகவும், பெண்களை அவதூறாக சித்தரிப்பது தனக்கும், பெண் சமூகத்திற்கும் அவமானமாக இருக்கிறது என்றும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமச்சந்திரனை நள்ளிரவில் தூக்கியது பெரம்பலூர் போலீஸ்.
முழுமையாக விசாரணை நடத்தியவர்கள், அதிகாலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சத்தம் இல்லாமல் சிறையில் அடைத்தார்கள். இதற்கு நாம் தமிழர் கட்சி என்ன விதமான பதிலை சொல்ல போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
-ஷானு