தி.மு.கவிற்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

காவிரி டெல்டா விவசாயிகள் துயர் துடைக்காத அரசாக தி.மு.க இருக்கிறது
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

தி.மு.கவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கொடநாடு கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள குற்றவாளிகளுக்கு தி.மு.ககாரர் ஜாமீன் கொடுத்துள்ளார். திமுக வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடுகிறார்கள்.

கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் வழக்கு விசாரணை தாமதமானது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், புதிய ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, 290 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 90 சதவீத விசாரணை முடிந்தது. தி.மு.க ஜாமீன் தாரரை விசாரிக்க தாமதம் செய்வது ஏன்?

சட்டப்போராட்டம் நடத்தி 50 ஆண்டு கால காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் அ.தி.மு.க சாதக தீர்ப்பைப்பெற்றது.அதை அமுல்படுத்த தங்களது INDIA கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரை பெங்களூரில் சந்தித்தபோது வலியுறுத்தாது ஏன்? தமிழக பிரச்சினையையே INDIA கூட்டணி அமைத்ததால் சரி செய்ய முடியாத மு.க.ஸ்டாலின், இந்திய அளவில் பிரச்சினைகள் சரி செய்யப்போவதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

காவிரி நதி நீர்ப்பிரச்சினைக்காக எங்களது எம்.பிக்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே முடங்கியது.காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகுகின்றன.காவிரி டெல்டா விவசாயிகள் துயர் துடைக்காத அரசாக தி.மு.க இருக்கிறது.

அ.தி.மு.க மிகப்பெரிய கட்சி.2 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி.பி.ஜே.பி என்ன தீண்டத்தகாத கட்சியா? அதனுடன் நீங்கள் 1999ல் கூட்டணி அமைத்து, உடல் நிலை சரியில்லாதபோது இலாகா இல்லாத அமைச்சராக உங்கள் முரசொலி மாறன் நீடித்தாரே?

கட்சிக்கொள்கை என்பது வேறு.தேர்தல் கூட்டணி என்பது வேறு.அரசியல் சூழலுக்கு தகுந்த மாதிரி தேர்தல் கூட்டணி அமைப்பது தான் நடைமுறை.என் மீது போடப்பட்ட 4500 கோடி ஊழல் வழக்கை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திரும்பப்பெற முயற்சித்தும், தொடர்ந்து நடத்தி, ஊழலற்றவன் என நிரூபித்தேன்.ஆனால் தி.மு.க அமைச்சர்கள் மேல் அம்மா ஆட்சியில் போடப்பட்ட வழக்கை அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் தி.மு.க அரசு வழக்கறிஞர்களை நியமித்து, வெற்றிப்பெறச் செய்ததை இன்று உயர்நீதிமன்றம் தானாக விசாரிப்பது வெட்கக்கேடு.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை விஷயத்தில் 27 மாதங்களாகியும் தராமல் இழுத்தடித்து வருகிறது. இது மகளிரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. பதிவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. உணவுப்பொருள், மேல் சட்டை, கால் செருப்பு அனைத்து விலைகளும் உயர்ந்துவிட்டது. மக்கள் கொந்தளித்து போய் உள்ளார்கள்.

தி.மு.க அரசு கபட நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகிறது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை.தனது குடும்ப வளர்ச்சியிலேயே அக்கறை செலுத்துகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தி.மு.கவிற்கு பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com