சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுத்ததால் சாலை படுத்து போராட்டம் நடத்திய நடிகர் பவன் கல்யாணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் புதிய நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுத்ததற்கு வெளிநாட்டு நிறுவனங்களில் சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊழல் புகாரின் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். முன்னதாக சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய சென்ற போலீசாரை கண்டித்து அவரது மகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் எப்படி ஏ-8 குற்றவாளியாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளவரை கைது செய்யலாம். இந்திய சட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? என டிஎஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் உங்கள் சிஎம் ஜெகன்மோகன் இங்கிலாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரின் உத்தரவை நீங்கள் செயல்படுத்துக்கிறீர்கள். இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர்.
இதைக்கண்டித்து ஆந்திராவின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. கிருஷ்ணகிரி வழியாக ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதேபோல் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. பள்ளி,கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன.இதனால் ஆந்திரா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைதுக்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும்.அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த பார்க்கிறது என குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சென்ற பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக பவன் கல்யாண் பயணித்த விமானம் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டது. விஜயவாடா சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என காவல்துறை அளித்த கடிதத்தை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்காமாக செல்ல முயன்றபோது பவன் கல்யாணை ஆந்திரா போலீசார் மீண்டும் தடுத்தி நிறுத்தினர். அனுமஞ்சிப்பள்ளியில் பவன் கல்யாணின் வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன. இதனால் மங்களகிரிக்கு நடந்து செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் ஆவேசமடைந்த பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியே பரபரப்பானது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் பவன் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவன் கல்யாணை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பவன் கல்யாணின் இந்த திடீர் பயணத்தால் ஆந்திராவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.