சென்னையில் உள்ள 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், நாடாளுமன்றத்தின் சிறந்த எம்.பி-களுக்கு 'சன்சத் ரத்னா’ விருது ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்பிய விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், கேள்விகள், வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறந்த எம்.பி-க்களை தேர்வு செய்துள்ளது.
இதில், மக்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-க்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே முதலிடத்தையும், சிவேசேனாவைச் சேர்ந்த ஸ்ரீரங் அப்பா பார்னே இரண்டாவது இடத்தையும், ஜார்கண்ட்டைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பித்யுத் பரன் மஹதோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.
அதே போன்று, மாநிலங்களவையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி டாக்டர் யாஜ்னிக் அமீ ஹர்ஷத்ரே முதலிடத்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி முகமது அப்துல்லா 2வது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஃபௌசியா தஹ்சீன் அகமது கான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.