ரவுடிகளுக்குப் பயந்து பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மே- 1ம்தேதி தமிழ்நாடு முழுவதிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. தென்காசி மாவட்டம், வாடியூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். ஆனால், ரவுடிகளுக்கு பயந்து சிவலார்குளம் பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம், சிவலார்குளத்தில் கிராம சபை கூட்டம் நடத்தும் பொறுப்பு பி.டி.ஓ விஜயகணபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் காலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அங்கு ஒரு சில பொதுமக்கள் மட்டுமே இருந்தனர். பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் கதிர்வேல் மற்றும் கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. உடனே பி.டி.ஓ விஜயகணபதி, வள்ளியம்மாளின் வீட்டிற்கு நேரில் சென்று கிராமசபை கூட்டத்திற்கு அழைத்தார். ஆனால், தலைவி வர மறுத்து விட்டார்.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது சில ரவுடிகள் அங்கு வந்து என்னை வெட்ட முயற்சி செய்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது பட்டப்பகலில் முறப்பநாட்டில் வி.ஏ.ஓ வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே, எனக்கு பாதுகாப்பில்லாத கூட்டத்திற்கு நான் வரமுடியாது என்று மறுக்கவும், ஒரு சில பொதுமக்களைக் கொண்டு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.