பழனி: 'முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடக்கவில்லை' - இந்து முன்னணி புகார்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

'பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடக்கவில்லை' என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புகார் தெரிவித்துள்ளார்.

போகர் ஜெயந்தியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழாவில், புலிப்பாணி வாரிசுகள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால், தற்போதுள்ள கோவில் நிர்வாக அதிகாரி, அதை நடத்த கூடாது என உத்தரவிட்டார்.

ஆனாலும், கோர்ட்டில் விழா நடத்த அனுமதி வாங்கியும் கூட பல்வேறு இடையூறுகள் கொடுத்து கொண்டு உள்ளனர். பொதுவாக இந்த அரசாங்கம் இதுபோன்ற அதிகாரிக்கு துணையாக உள்ளனர்.

பழனி முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் கூட ஆகம விதிப்படி நடக்கவில்லை என சொல்கிறார்கள். அதன் விளைவுதான் அரசுக்கு கேடு விளைவித்து கொண்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக தான் விஷ சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர்.

இதில் அரசும், காவல் துறை அதிகாரிகளும் போதிய கண்காணிப்பு இல்லை. ஆனால் அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்கிறார்கள். அது சரியான நடைமுறை இல்லை. அரசு சரியாக செயல்பட்டால்தான் அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள். வேறு ஏதாவது சம்பவத்தில் இறந்தால் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் என்கிறார்கள்.

விஷ சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருகிறார்கள், இது விஷ சாராயம் அருந்தியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதை இந்து முன்னணி கண்டிக்கிறது.

சமீபத்தில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் யானைக்கு ரூ.30 லட்சத்தில் நீச்சல் குளம் கட்டி இருக்கிறார்கள். இதற்கான கட்டிட செலவு எவ்வளவு ஆகும் என அதிகாரி ஒருவரிடம் கேட்டால் ரூ.10 லட்சம் என்கிறார்கள்.

அதேபோல, பழனி முருகன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு பக்தர்கள் லட்சக்கணக்கில் நன்கொடையாக நிதியும், பொருட்களும் அளித்து இருக்கிறார்கள். இதில், வெளிப்படைத் தன்மைதேவை. எனவே, கோவில் நிர்வாகம் கும்பாபிஷேகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com