ஓ.பி.எஸ்- டி.டி.வி இணைந்ததால் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பில்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.
ஓ.பி.எஸ்- டி.டி.வி இணைந்ததால் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பில்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் இ.பி.எஸ் தலைமையிலான அணியை அ.தி.மு.க-வாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும் அதிமுகவில் இருந்து தன்னை நீக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது என நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் பேசும் பொருளானது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கடுமையாக சாடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்த நிலையில், நேற்று மாலை அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்தனர். மேலும் அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம் என்றனர்.சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இன்றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கான அ.தி.மு.க-வின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டது. அடிப்படை தொண்டர்கள் முதல் மற்றும் நிர்வாகிகள் சிலருக்கு அ.தி.மு.க கதவுகள் திறந்து இருக்கும். ஆனால் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு மட்டும் அ.தி.மு.க-வின் கதவு என்றைக்கும் அடைத்தே இருக்கும். அதேபோல் 3 பேரும் கொள்ளைப்புறம் வழியாக அ.தி.மு.க-வில் வருவதற்கு வழியே இல்லை. பா.ஜ.க அப்படி நிர்பந்தத்தை அ.தி.மு.க-விற்கு கொடுக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ் - டி.டி.வி தினகரனை பாஜக சேர்த்து கொண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க உள்ளது.

கடல் கடந்து முதலீடுகள் எப்படி செய்வது என்று பேசி இருக்கலாம். திருச்சியில் உங்கள் ஆதரவோடு மாநாடு நடத்தி முடித்துவிட்டேன் என்று பேசி இருக்கலாம். அதேபோல் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டோம் என பேசி இருக்கலாம் என ஓ.பி.எஸ் டி.டி.வி சந்திப்பு குறித்து சாடினார்.

அதேபோல் பல்வேறு வகைகளில் தி.மு.க-விற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஓ.பி.எஸ் - சபரீசன் சந்திப்பு என்பது பிற்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுபோல் இது அமைந்துள்ளது.

அதேபோல் ஓ.பி.எஸ் - டி..டிவி தினகரன் சந்திப்பு என்பது இவரு ஒரு அமாவாசை, அவரு ஒரு அமாவாசை ஆகையால், ஒரு அமாவாசை இருந்தாலே இருட்டாக இருக்கும் இதிலும் இரு அமாவாசைகளும் ஒன்றானால் கரும் இருட்டாக ஆகி விடும் என்றார். மேலும் இருவரின் இணைப்பால் அ.தி.மு.க-விற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கழட்டிவிடுவது என்பது போல் முதுகில் கத்தியை வைத்துக்கொண்டு இருப்பார்கள். நரி வலதுப்பக்கம் அல்லது இடதுப்பக்கம் வந்தால் என்ன? எங்களைக் கடிக்கவில்லை என்றார்.

இன்றைக்கு அ.தி.மு.க சீரும் சிறப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. தர்மயுத்தம் தொடங்கியதே டி.டி.வி தினகரனுக்கு எதிராகத்தான் என்றெல்லாம் சொல்லிவிட்டு தற்போது அவரைச் சந்தித்துள்ளார். சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். இனி எந்தச் சூழ்நிலையிலும் அ.தி.மு.கவிற்குள் ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது. சசிகலாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் தற்போது சின்னம்மா என்று கூறுகிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ள கே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல் டிடிவி தினகரன் சொல்வதை எல்லாம் நகைச்சுவையாகத் தான் தொண்டர்கள் எடுத்துக்கொள்ளவர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com