ஓ.பி.எஸ் அணியின் புதிய நாளிதழ்: வைரலாகும் அழைப்பிதழ்

ஓ.பி.எஸ்- மருது அழகுராஜ்
ஓ.பி.எஸ்- மருது அழகுராஜ்

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் வசம் அ.தி.மு.க சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் எடப்பாடி தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து கடும் வாதங்களை முன் வைத்து வருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளார். அஇஅதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளராக இருக்கும் மருது அழகுராஜ் கத்துக்குட்டி, கைநாட்டு கவிதைகள் போன்ற நூல்களையும், எழுத்து சித்தர், உ.வே.சா விருதுகளையும் பெற்றவர்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம், ‘நமது புரட்சித் தொண்டன்’என்ற பெயரில் நாளிதழை தொடங்குகிறார். இந்த நாளிதழ் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு ஆசிரியராக பொறுப்பேற்க உள்ளார் மருது அழகுராஜ். ஓ.பி.எஸ் தரப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், தங்கள் தரப்பின் குரலை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்க உதவியாக ஊடகத்தைத் தொடங்கத் திட்டமிட்டு வந்தனர். அதற்காக, தற்போது, ‘நமது புரட்சித் தொண்டன்’என்ற நாளேட்டை வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

‘நமது புரட்சித் தொண்டன்’நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்க உள்ள மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு, ’லேடியா? இந்த மோடியா?’, ‘மக்களால் நான், ’மக்களுக்காக நான்’ போன்ற எண்ணற்ற உரைகளை எழுதித் தந்தவர். ‘நமது புரட்சித் தொண்டன்’நாளிதழ் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை மருது அழகுராஜ், பூ, பழம், தம்பூலத்துடன் சென்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளார்.

‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நாளிதழை வெளியிட, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைக்கும் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் நாளிதழைப் பெற்றுக்கொள்ள உள்ளனராம். இந்த விழாவில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com