தர்ம யுத்தத்திற்கு பின் டி.டி.வி.தினகரனை சந்தித்த ஓ.பி.எஸ்- அடுத்த கட்டத் திட்டம் என்ன?
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி வருகிறார்.
சென்னை, அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனை வாசல் வரை வந்து வரவேற்றார் டி.டி.வி.தினகரன். அதிமுகவில் நீக்கப்பட்ட பின் முதன் முறையாக டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்.
டி.டி.வி.தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓ.பி.எஸ் சந்திக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஏற்கனவே கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வழக்குகளை தொடர்ந்து வரும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களை அணி திரட்டி வருகிறார். இன்று நடைபெறும் சந்திப்பில் இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் உடனான இந்த சந்திப்பின்போது நெல்லை, நெல்லை, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடத்த உள்ள மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
2017ம் ஆண்டுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனை சந்தித்துப் பேசுகிறார் ஓ.பி.எஸ். திருச்சி மாநாட்டில் சசிகலாவை சின்னம்மா என அழைத்திருந்தார் ஓ.பி.எஸ். டி.டி.வி.தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என ஏற்கெனவே ஓ.பி.எஸ் அறிவித்து இருந்தார்.