மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
மணிப்பூர் விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது.
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் என்று மக்களவையில் அக்கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
"இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் சொண்டு வர காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியது. அதன் பேரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த தீர்மானத்தை முன்வைப்பார். இந்த கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி அரசாங்கத்தின் ஆணவத்தை உடைத்து அவர்களை மணிப்பூர் பற்றி பேச வைப்பது எங்கள் கடமை என்று நாங்கள் உணர்கிறோம். நாடாளுமன்றத்தில் பேசாத பிரதமரின் ஆணவத்தை உடைக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது’’ என தாகூர் கூறினார்.
இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக இந்த தீர்மானத்தை முன்வைக்க முடிவு செய்ததாக முன்னணியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
"சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க" புதன்கிழமை காலை 10.30 மணிக்குள் அதன் உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தனது நிர்வாகிகளுக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம், எண்ணிக்கை சோதனையில் தோல்வியடையும் என்றாலும், விவாதத்தின் போது மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கத்தை முட்டுக்கட்டை போட்டு கருத்துப் போரில் வெற்றி பெறுவோம்’’என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
மணிப்பூர் நிலவரங்கள் குறித்த விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிப்பார் என்று பா.ஜ.க அரசு வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் இந்த முக்கியமான விஷயத்தை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதும் ஒரு உத்தி என்று காங்கிரஸ் கூட்டணியினர் தெரிவித்தனர்.