புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் - என்ன காரணம்?

”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும்”
new parliament
new parliament

புதுடெல்லியில் இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இதனால் அதற்கு பதிலாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்ததையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில், டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், வருகிற 28-ந் தேதி திறக்கப்படுகிறது.

888 மக்களவை உறுப்பினர்களும், 300 மாநிலங்களவை உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது இந்த புதிய நாடாளுமன்றம். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கும்போது, மக்களவையில் 1,280 உறுப்பினர்கள் வரை இங்கு அமர முடியும். இந்நிலையில் வருகிற 28-ந் தேதி இந்த நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ஏற்று, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார். இதற்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்கக்கூடாது என எதிர்ப்புக் குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திறப்பு விழா நடைபெற இருக்கும் தேதியான மே 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதிய பாராளுமன்ற உள்தோற்றம்
புதிய பாராளுமன்ற உள்தோற்றம்

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். இதற்கிடையே எம்.பி.க்களுக்கு நேற்று புதிய பாராளுமன்ற அழைப்பிதழ்கள் ஆன்லைனில் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ந் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும். பிற்பகலில் திறப்பு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அழைப்பிதழை பெற்றவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த ஆலோசனையில் , திறப்பு விழாவை கூட்டாக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இதன் வெளிப்பாடாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தங்கள் கட்சிகள் புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com