சனாதனம் பற்றி மலேரியா, கொசுவை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, உதயநிதி அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லை என வி.கே.சசிகலா கடுமையான சாடி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியிலுள்ள பள்ள மொளச்சூரில் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கினார்.மேலும் முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ மொளச்சூர் பெருமாளின் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.கே சசிகலாவிடம், ”வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நிச்சயமாக சாத்தியமாகும்.ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக திமுக தேர்தலில் வாக்குறுதி அளித்தது.
அதே நேரம் அரசு நிதிநிலை சரியில்லாததால் 2 கோடியே 18 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது இயலாத காரியம்.
அரசு அதிகாரிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாத மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சமூகத்தினரையும் சமமாக நினைக்க வேண்டும். சனாதனத்தை மலேரியா, டெங்கு கொசுவை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினூக்கு அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லை.
மேலும், திமுகவினர் அரசியலுக்காக சனாதனம் குறித்து கண்டபடி பேசி வருகின்றனர்.திமுக ஆட்சியில் எப்படி கொலைகள் நடக்காமல் இருக்கும். முதலில் தனது கட்சிக்காரர்களை திமுக தலைமை சரி பண்ணி வைத்தால் தான் கொலைகள் நடப்பதை தடுக்க முடியும்.
அனைத்து காவல் நிலையத்திலும் திமுக கரை வேட்டியை பார்த்தால் நாங்கள் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என போலீஸ்காரர்கள் புலம்புவதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. ஆகையால் இதை நன்றாக பார்த்துக்கொண்டிருக்கின்ற மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். எதிர் வரும் தேர்தல்களில் மக்கள்தான் சரியான பாடத்தை திமுகவிற்கு புகுட்ட வேண்டும்” என தெரிவித்தார்.