புதிய தலைமைச் செயலகம் விவகாரம்: அ.தி.மு.க மாஜி எம்.பி நீதிமன்றத்தில் வழக்கு

தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்டவில்லை என்று புகார்
அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன்
அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன்

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2006-2011 -ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம், கடந்த 2010 -ம் ஆண்டு மார்ச் 13 -ம் தேதி திறக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரகுபதி தலைமையிலான ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது.

மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி 2018 -ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018 -ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நடத்தலாம் என்ற உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2018 -ம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித்துறைக்கு புகார் அளித்துள்ளேன். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது, ஆட்சியில் உள்ள தி.மு.க, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறை காட்டவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், 2018 -ம் ஆண்டு, தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com