எடப்பாடி பழனிசாமி மீது "புதிய வழக்கு" - ஆதரவாளர்கள் அதிர்ச்சி

எடப்பாடி பழனிசாமி மீது, மேற்கு மாவட்ட செயலாளர் பி.ஏ. ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில், எடப்பாடியில் அவரது ஆதரவாளர்கள் தன்னை ஆபாசமாக திட்டி, தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி காவல் நிலையத்தில் பெங்களூரு புகழேந்தி புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை மோதல் வெடித்தை அடுத்து, ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பிளவு ஏற்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பி.எஸ். மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் சட்ட போராட்டம் நடத்தினார்.

இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமியிடம் செயற்குழு, பொதுக்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போன்றவை அதிகளவு இருந்த காரணத்தால் ஓ.பி.எஸ். மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் பெயர், கொடி, தலைமை அலுவலக முகவரி போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு, அ.தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

ஆனால், ஓ.பி.எஸ்.ஆதரவாளர் வைத்தியலிங்கமோ, 'அ.தி.மு.க கட்சியின் கொடி, பெயர், சின்னம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை லெட்டர்பேடில் பயன்படுத்துவது யாரும் தடுக்கமுடியாது' என சவால் விடுத்தார்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு புகழேந்தி வருகை தந்தார்.

அப்போது, அ.தி.மு.க கட்சியின் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். தரப்பினர் பயன்படுத்தி, டிஜிட்டல் பேனர், கொடி உள்ளிட்டவை கட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், அங்கு வந்த பெங்களூரு புகழேந்தியை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தாக்க முயன்றனர். அவர் வந்த காரை மறித்து கார் கண்ணாடியை தாக்கினர். இதில், கண்ணாடி உடையவில்லை. அதற்குள் அந்த கார் அந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்றது.

ஆனாலும், எடப்பாடி ஆதரவாளர்கள் விடாமல் துரத்திச் சென்று தாக்கினர். ஆபாசமாகவும் அர்ச்சனை செய்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு புகழேந்தியின் காரை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் முருகன், செல்வம் உள்ளிட்டோர் இடைமறித்து தாக்கியும், தகாத வார்த்தைகளை பேசியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்தினார் என்றும் 30 பேர்கள் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஏ. ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முருகன், செல்வம் உள்ளிட்ட 30 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com