ஸ்மார்டி சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் 1000 கோடி ரூபாய்கும் அதிகமான நிதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பொருட்காட்சி திடலில் புதிய வர்த்தக மையம் 56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
இதில் இரண்டு அரங்குகள் திறம்படக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சுமார் 1500 இருக்கைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஒரே நேரத்தில் 379 கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் ஏரியா அமைக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக அலுவலகம் தவிர ஃபுட் கோர்ட்டும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வர்த்தக மையம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் திறப்பு விழா நடத்தப்படவில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி செல்வத்திடம் பேசினோம், ‘’கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தக மையம் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நிகழ்ச்சியாய் மாவட்ட நிர்வாகம் நடத்திய பொருனை நெல்லை புத்தக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், எழுத்தாளர்கள் பலர் இங்கு வருவதற்கு சிரமம் இருப்பதாகச் சொல்லவே அந்த நிகழ்ச்சி வ.உ.சி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது மீண்டும் மிக விரைவில் இதன் திறப்பு விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. அரசியல் சூழல் காரணமாக வர்த்தக மையம் திறக்க தாமதம் ஏற்படுகிறது’’என்கிறார்.
அதாவது மேயர் சரவணன், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ ஆகியோர்களுக்கு இடையேயான மோதலால் வர்த்தக மையம் திறக்கப்படாமல் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.