நெல்லை: ‘ஆளுநர் பேசுவது சரியாக இருந்தால் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்’- நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆளுநர் பேசுவது சரியாக இருக்கும் பட்சத்தில் அரசு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என தமிழக பா.ஜ.க சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட இந்து முன்னணி அலுவலகம் நெல்லை டவுன் மவுண்ட் ரோடு பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தைப் பற்றிப் பேசி வருகிறோம். திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, துளு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை உள்ளடக்கியது.

மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற வேண்டும். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்.

திராவிட நாடு ஆட்சி என்பது எந்த வகையில் உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகள் தி.மு.க ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக எந்தத் திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டம் -ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகப் பல காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பதில்லை.

தி.மு.க ஆட்சி அமைவதற்கு முன்பே ஆட்சி அமைந்தால் ஒரு மணி நேரத்தில் மணல் அள்ளிக்கொள்ளலாம் என தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் பேசினார். அதுதான் இப்போது நடக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதி பூங்கா எனச் சொல்ல முடியும். குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பாதுகாப்பு, ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என இருந்தால் எப்படி சமமான ஆட்சியாக இருக்க முடியும்.

12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது. சில தொழில்சாலைகள் எல்லா வகையிலும் உற்பத்தியை பெருக்கும் வகையில் தான் உள்ளது. இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு குறித்து ஆளுநர் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கு உள்ளது.சில விசயங்களைக் கோடிட்டுக் காட்டவேண்டியது ஆளுநருக்கு அவசியமானது.அவர் பேசியது சரியாக இருக்குமேயானால் அதனை அரசு ஏற்றுகொள்ள வேண்டியது தானே” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com