கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும் என திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாரயத்தால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள விவகாரம் தொடர்பாக பேசினார்.
அப்போது பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாரயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 9 பேர் இறந்துள்ளனர். அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. பொம்மை முதலமைச்சர் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். கள்ளச்சாரயம் அதிக அளவு பெருகி இருப்பது குறித்து சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்து கூறினேன். ஆனால் அது குறித்து அரசு கவனம் செலுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்டவை பெருகி உள்ளது. கஞ்சா விற்பனையை கூட தடுக்க முடியாத திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. கஞ்சாவை ஒழிக்கிறேன் என தமிழக டிஜிபி 2.0, 4.0 என போட்டுக் கொண்டிருக்கிறார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நாளை மரக்காணம் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இருக்கிறேன். டாஸ்மாக் 24 மணி நேரம் திறந்துள்ளது. போலி மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. வருமானத்தை மட்டும் தான் இந்த அரசு பார்க்கிறது. 500 மதுபான கடை மூடப்படுவதாக கூறி 1000 சில்லறை கடைகளை திறக்கிறார்கள். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. கள்ளச்சாரயம் மற்றும் போலி மதுபான விற்பனை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.