'ஓ.பி.எஸ் தவறை உணர்ந்தால் இ.பி.எஸ் ஏற்றுக்கொள்வார்' - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் தவறை உணர்ந்து வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தி.மு.க அரசை வீழ்த்துவதுதான் அ.தி.மு-கவின் கடமை' என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆர்.ஒ பிளான்ட் சுத்திகரிப்பு குடிநீர் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ தேர்தல் ஆணையம் அறிவித்த அறிவிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மக்கள் ஆதரவு அத்தனையுமே எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இணையத்தில் வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு வழி காட்டுகின்ற வாய்ப்பாக எங்களுக்கு கிடைத்துள்ளது.

கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்படும் என்பது அ.தி.மு.க-வின் நடைமுறை. மன்னிப்பு கடிதம் கொடுத்தால் இயக்கத்தில் தொண்டராக சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பொதுச்செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். தோல்வி மீது தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறவர்கள் போராடிப் போராடி மீண்டும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு அ.தி.மு.க-வில் சேரலாம் என்ற மறைமுகமாக அழைப்பாக இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்.

ஓபிஎஸ் தன் தவறை உணர்ந்து பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

மக்கள் பிரச்னைகள் எவ்வளவோ இருக்கிறது. தக்காளி விலையில் இருந்து இஞ்சி விலை வரை ஏறிக்கொண்டு இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையின் சரி பிரச்சார கூட்டங்களிலும் சரி முரண்பாடாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது தவிர எதுவுமே சரியாக இதுவரை நடக்கவில்லை.

இன்றைக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும்போது காலையில் 7 முதல் 9 மணி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் செல்லக்கூடிய நேரத்தில் மதுக் கடைகளைத் திறக்க யாராவது கோரிக்கை கொடுத்தார்களா?

அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம் என்றாலே மிகப்பெரிய தவறு. இதுபோன்ற செயல்களை திமுக கையாளுமானால் ஏற்கனவே தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது.. வீழ்ந்து கொண்டிருக்கிறது.

மக்கள் பிரச்னைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மகளிர் உதவித்தொகையை  முறையாக கையாளப்  போவதில்லை நடைமுறையில் தெரிந்து விட்டது. பொருளாதாரத்தை மிச்சம் செய்வதற்காகவே செய்கிறார்கள்.

எந்த திட்டத்தையும் முறைப்படி நிர்வாக ரீதியாக செய்யவில்லை. திமுக நிர்வாக ரீதியாகத் தோல்வி அடைந்திருக்கிறது. அரசு அலுவலர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை. காவல் துறையை சரியாக பயன்படுத்த முடியவில்லை.

யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது பொதுச்செயலாளருக்கு தெரியும். மீண்டும் துரோகம் செய்தால் கண்டிப்பாக இபிஎஸ் பொறுமையாக இருக்க மாட்டார். 

ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் தவறை உணர்ந்து வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். திமுக அரசை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க-வின் கடமை’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com