தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் அமரர் கருணாநிதி. இவரது மனைவி தயாளு அம்மாள் பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். அவருக்கு வயது (90). இவர், கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
அவரை அவரது மகன்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மற்றொரு மகன் மு.க.தமிழரசு ஆகியோர், தங்களது தாயாரை அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு இன்று 90-வது பிறந்த நாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில், அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில், குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதர்கள் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, சகோதரிகள் செல்வி, கனிமொழி மற்றும் தயாநிதிமாறன், அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் கருத்து கேட்டபோது, தயாளு அம்மாள் பிறந்தநாள் விழாவை யொட்டி, மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் பேசி கொண்டனர் என்றும், மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் எப்போது சண்டையிட்டனர்? என கேள்வி எழுப்பினார்.