"தி.மு.க என்ற பட்டத்து யானை ஆதரவற்றவர்களை அரவணைக்கும்; ஆணவப்போக்கினால் சீண்டியோரைத் தூக்கி வீசும்" என யானை கதை சொல்லி எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில், 'தி.மு.க மக்கள் மனம் விரும்பும் பட்டத்து யானை. அது மாட்சிமை மிக்க ஓர் ஆட்சிக்கான அடையாளம் மட்டுமல்ல; எண்ணிறந்த போர்க்களங்களைக் கண்டு, எதிர்ப்படும் எதிரிகளைப் பந்தாடி வெற்றி வாகை சூடி வரும் போர்யானையும் கூட!
சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய நான்கு பலமிக்க கால்களினாலும், மக்கள் நலனுக்கென்றே இயங்கும் உறுதி மிக்க துதிக்கையினாலும், நிமிர்ந்து நிலை பெற்று நிற்கும் இந்த யானை, ஆதரவற்றவர்களை அரவணைக்கவும் செய்யும்; ஆணவப்போக்கினால் சீண்டியோரைத் தூக்கி வீசவும் செய்யும்.
இது ஊரறிந்த உண்மை என்றாலும், யானை என்னும் பேருரியின் ஆற்றலைக் குறித்து சில நோய்ந்த மாடுகள் இன்றைக்கு விசனப்படுவதுதான் விசித்திரமாக இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.