அமைச்சர் செஞ்சி மஸ்த்தானின் உடன் பிறந்த சகோதரர் காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகிப்பவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திண்டிவனத்தைச் சேர்ந்த மருவூர் ராஜா என்கின்ற சாராய வியாபாரியுடன் தொடர்பு உள்ளதாகவும், , இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால், இதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், அவரது மகன், மருமகன் மற்றும் தம்பி என குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் கட்சிப் பதவிகளில் இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது.
இதற்கிடையே, தி.மு.க-வில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூர் செயலாளராக உள்ள காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், 'விழுப்புரம் வடக்கு மாவட்ட செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி பேரூர் கழக செயலாளர் காஜா நஜீர், பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக எம்.கார்த்திக் செஞ்சி பேரூர் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்' எனக் அறிவித்துள்ளார்.
இதில், பதவி பறிக்கப்பட்ட, காஜாநஜீர் என்பவர், அமைச்சர் செஞ்சி மஸ்தல்தானின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.