தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்தக் கூட்டம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்தும், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து முதல் நபராகப் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக, அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றதும், முதலமைச்சர்தான் முதலில் வெளியே செல்வார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பின்தொடர்வது வழக்கம்.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியே செல்லும் முன்னரே, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியே சென்றது அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தரப்பில் கேட்டபோது, 'அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு அரசு தொடர்பாக முக்கியப் பணி இருந்ததால், அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னரே அவர் வெளியே சென்றார். இதில், அரசியலோ அல்லது வேறு ஏதும் இல்லை. அரசியல் யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது' என்று விளக்கம் கொடுத்தனர்.