'மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே இது" - ஆளுநருக்கு எதிராக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசில் அமைச்சர்களாக உள்ள 78 பேரில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக புகார்
மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை உத்தரவிட்டார். ஆனால், அவர் உத்தவிட்ட 5 மணி நேரத்திலேயே அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார்.

உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் தெரிவித்து இருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறவும் ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளார் என கூறப்பட்டுகிறது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்தால் அவர் மீதான விசாரணை பாதிக்கப்படும் என்றும், அதனாலேயே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தாக ஆளுநர் ரவி விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பதிவில், 'ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே' என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசில் அமைச்சர்களாக இருக்கும் 78 பேரில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன, அவர்கள் இன்னும் அமைச்சர்களாக தான் தொடர்கிறார்கள். இதற்கு பா.ஜ.கவின் பதில் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com