’கொடைக்கு பதிலாகப் பிச்சை’- சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம்

'’காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்’’
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

உயர்நீதி மன்ற கிளையை மதுரையில் அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மதுரை, அண்ணா நகரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேயர் இந்திராணி உள்ளிட்ட தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

அந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர். கோவில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது. திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.

தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர்நீதிமன்ற கிளையை கொண்டு வந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை. மதிய உணவு திட்டத்தை காமராஜர் துவங்கி, எம்.ஜி.ஆர், கலைஞர் வரை அனைவரும் பல்வேறு விதங்களில் முன்னேற்றி இருந்தாலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

இது பல்வேறு விதங்களில் குழந்தைகளுக்கு பயன்படுகின்றது. இப்படி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சி தான் கலைஞர் ஆட்சி. மதுரைக்கு எய்ம்ஸ் வருகிறதோ இல்லையோ என்ற நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திறந்தவர் ஸ்டாலின்” என்றார்.

இவரது பிச்சை பேச்சு சர்ச்சையான நிலையில், எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்றங்கள் மீதும், நீதித்துறை மீதும் மதிப்பு வைத்துள்ளேன். உணர்ச்சிப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வாறு பேசிவிட்டேன். உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்டத்திற்கு கிடைத்த கொடை என்பதற்கு பதிலாக வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. எனவே, நான் கூறிய வார்த்தையை திரும்பப்பெறுகிறேன்; அதற்காக வருந்துகிறேன்’’ என அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com