மயிலாடுதுறை மா.செ-வை நீக்கிய வைகோ - அதிர்ச்சி பின்னணி

’’தெரியாம நடந்து போச்சு. ஒரு லட்டர் எழுதிக்கொடு. சேர்த்துக் கொள்கிறேன்’என்றார். "நான் என்ன தவறு செய்தேன்?'’
வைகோ
வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தனது கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனியை அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ம.தி.மு.க-வில் தொடர்ந்து 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக கட்சிப்பணியாற்றி பல்வேறு பதவிகள் வகித்து பின்னர் மாநில இளைஞரணி செயலாளராகவும் உயர்ந்து சமீபத்தில்தான் அவருடைய கடுமையான உழைப்பின் ஊதியமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பதவி அவருக்கு வழங்கபட்டது. கட்சியில் வைகோ, துரை வைகோ ஆகியோருடன் நெருங்கி பழகியும் வந்தார். இந்நிலையில் மார்கோனி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலா வரத்தொடங்கி இருக்கிறது.

இது குறித்து நாமும் விசாரித்தோம். “கடந்த் சில மாதங்களுக்கு முன்பு மார்கோனி பா.ஜ.க-வுக்கு மாறப்போகிறார் என்ற ஒரு வதந்தி ஏகத்திற்கும் பரவி அடங்கியது. அதன் பின்னர் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது தருமை ஆதீனகர்த்தர் மற்றும் இந்து அமைப்புனருடன் நெருங்கி பழகி வந்ததையடுத்து நிச்சயம் மார்கோனி பா.ஜ.க-வுக்கு செல்வது உறுதி என்றும் ஒரு தகவல் உலா வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பவுன்ராஜ் மார்கோனியின் வீட்டுக்கே வந்து அ.தி.மு.க-வுக்கு வரும்படி அழைப்பு விடுக்க, அதற்கு அடுத்த இரு தினங்கள் மார்கோனி சேலம் சென்று அப்படியே ரகசியமாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார் என்று தகவலும் பரவியது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் மார்கோனி சேலம் அருகே உள்ள ஒகேனேக்கலுக்கு இரு தினங்கள் சுற்றுலா செல்ல, இந்த ஒட்டு மொத்த தகவலும் வை.கோவிடம் போய்ச்சேர்ந்துள்ளது. கடுப்பான வை.கோ உடனே எந்த விசாரணையும் இல்லாமல் மார்கோனியை பதவி நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என சொல்லப்பட்டது. அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மார்கோனியை சந்தித்த பின் இவர் மறுநாளே வேறு எங்கும் செல்லாமல் ஒகேனேக்கல் செல்ல வேண்டிய காரணம் என்ன? சேலம் மாவட்டத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எடப்பாடியை சந்திக்கத்தானே சென்றார்? என்று பலரிடமும் சந்தேக கேள்வி எழ இது குறித்து மார்கோனியிடமே நாம் பேசினோம்.

”கடந்த 29ம் தேதி பக்ரீத் பண்டிகை தொடர்பான விருந்தில் கலந்து கொள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தபோது அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் என்னை தேடி வீட்டுக்கு வந்தார். இப்போதுதான் அவரை நேருக்கு நேர் சந்திக்கிறேன். வந்தவர் ‘நீங்க அந்த கட்சியில் இருந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அ.தி.மு.க-விற்கு வந்துவிடுங்கள்’என்றபடி பேசினார். நானோ,’எதுவுமே செய்ய முடியாது என்று தெரிந்துதான் ம.தி.மு.க-வில் இருந்து வருகிறேன். நீங்கள் அ.தி.மு.க-வுக்கு சென்று இரு முறை எம்.எல்.ஏ ஆகி இப்போது மாவட்ட செயலாளரும் ஆகிவிட்டீர்கள். 21 வயதில் இந்த கட்சிக்கு வந்தேன். ஆனால், எதன் காரணமாகவும் நான் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணத்தில் இல்லை’என்பதை தெளிவாக எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர், நான் உங்களை சந்திக்க வருவதற்கு முன்பு அ.தி.மு.க பிரமுகர் அனைவரிடமும் உங்களை அழைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அ.தி.மு.க பிரமுகர் மணல் பாபு கொலை வழக்கில் நீங்கள் குற்றவாளி என தெரியாமல் சேர்த்துவிட்டோம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனே வருத்தப்பட்டார். எனவே உங்களையும் ஏற்கனவே இதே கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட எங்கள் கட்சியைச்சேர்ந்த கொள்ளிடம் ஜெயராமனையும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்போகிறோம்’என்றெல்லாம் கூறினார். ம.தி.மு.க-வில் 10 பேர் இருந்தாலும் ஒரு குடும்பமாக கொளரவமாக இருந்துவருகிறோம். என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்’ என்று கூறவே அவரும் எழுந்து சென்றுவிட்டார்.

இதன் பின்னர் மறுநாள் எனக்கு சந்திராஷ்டமம் என்பதால் எங்காவது வெளியூர் செல்லலாம் என்று திட்டமிட்டு நண்பர்களுடன் ஒகேனேக்கல் சென்றுவிட்டேன். எனது மாமனாரின் ஊர் சேலம் என்றாலும் கூட நான் ஊருக்குள் செல்லாமல் பை-பாஸிலேயே தர்மபுரி வழியே ஒகேனேக்கல் சென்றுவிட்டேன்” என்றவர் ஒகேனேக்கலில் நுழைவு வரி செலுத்திய ரசீதையும் காட்டினார்.

இந்த சூழலில் நான் சீர்காழி நகராட்சி சுயேச்சைக் கவுன்சிலர்கள் ஆறு பேருடன் சென்று அ.தி.மு.க-வில் இணைந்து விட்டதாக யாரோ சொன்னார்கள் என்று எங்கள் பொதுச்செயலாளர் என்னை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்திருக்கிறார். என் மீது புகார் என்றால் என்னையோ அல்லது மற்ற பொறுப்பாளர்களையோ விசாரித்து நடவடிக்கை எடுப்பதுதானே முறை. அப்படி எதுவும் செய்யவில்லை. ஏற்கனவே பா.ஜ.க-வில் இருக்கும் எனது உறவினரும், மாவட்ட தலைவருமான வெங்கடேசன் என்பவர் என்னை பா.ஜ.க-வுக்கு வந்துவிடும்படி வீட்டிற்கே வந்து அழைத்தபோது நான் மறுத்துவிட்டேன். அப்போது கூட கட்சியில் இதுபற்றி என்னை கேட்ட போது நான் உண்மையைக் கூறினேன். சரி என்று ஏற்றுக்கொண்டனர். ஆனால், இப்போது எந்த கேள்வியும் இல்லாமல் கட்சியை விட்டு நீக்கியது எந்தவிதத்தில் சரி என்று தெரியவில்லை. பெரும் மன உளைச்சலில் நான் என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டில் இருந்துவிட்டேன்.

அதன்பிறகு பொதுச்செயலாளர் மற்ற பொறுப்பாளர்களின் செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ’தெரியாம நடந்து போச்சு. ஒரு லட்டர் எழுதிக்கொடு. சேர்த்துக் கொள்கிறேன்’என்றார். "நான் என்ன தவறு செய்தேன்? கட்சிதான் என் உயிர் என்று இருந்தது தவறா? நான் லட்டர் எழுதிக்கொடுக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்.

தற்போது நான் குழப்பமான மன நிலையில் உள்ளேன். அவரே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். நான் தவறு செய்ததை அவர் உறுதிபடுத்தட்டும். நானே கட்சியிலிருந்து விலகிக்கொள்கிறேன். தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ‘தலைவர் எடுத்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று’என தங்கள் கருத்துக்களை கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கவுன்சிலரான எனது அம்மா உட்பட சுயேச்சை கவுன்சிலர்கள் அனைவரும் சீர்காழியில் தான் இருக்கின்றனர். அப்படி நான் போய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கட்சியில் இணைந்தால் அது செய்தியாக வெளிவந்திருக்காதா? இத்தனை வருடம் கட்சிக்காக உண்மையாக இருந்ததற்கு எனக்கு கிடைத்த பரிசு இதுதான்’’என்றார் வருத்தமான குரலில்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com