பாஜகவை கண்டித்து ரயில் மறியல்: சிபிஎம்-போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

சிஏஜி அறிக்கையில் பாஜக அரசின் டோல்கேட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மதுரையில் மத்திய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு கையில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

மத்திய பாஜக அரசு பதவி ஏற்ற 9 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கால தாமதம், டோல்கேட் ஊழல் ஆகியவற்றை கண்டித்து மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து மதுரை ரயில்வே நிலையம் முன்பாக முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் ரயில்வே நிலையத்திற்குள் முற்றுகையிட சென்றபோது காவல்துறையினர் அவர்களே தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சு.வெங்கடேசனின் கைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரயில் நிலைய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், ”பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கேஸ் சிலிண்டர் விலையை 1400 ரூபாய் வரை உயர்த்திவிட்டு தற்பொழுது 200 ரூபாய் குறைத்து விட்டு மக்களை ஏமாற்றுகிறது. சிஏஜி அறிக்கையில் பாஜக அரசின் டோல்கேட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com