மதுரை மாநகராட்சி மண்டலம் -5 -ல் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பெயர் இல்லை என கூறி மதுரை துணை மேயர் நாகராஜன் கல்வெட்டு முன்பு வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 5-ல் இன்று மேயர், துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், 12.05 மணிக்கு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திற்கு வந்த துணை மேயர் நாகராஜன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2022ம் ஆண்டில் ஃஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் 2 கல்வெட்டுகள் சுவரில் பதிக்கப்பட்டன. அதில் மேயர், கமிஷனர், மேற்கு மண்டல உதவி ஆனையர், மண்டலத் தலைவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், துணை மேயர் பெயர் இடம்பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் மாநகராட்சிக்கு வந்த மதுரை துணை மேயர் நாகராஜன், கல்வெட்டு முன்பு அமர்ந்து கல்வெட்டில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துணை மேயர் நாகராஜன் கூறுகையில், ‘’இதுபோன்ற பல்வேறு இடங்களில் எனது பெயரைப் புறக்கணித்து வருகிறார்கள். நானாக என் சொந்த செலவில் கல்வெட்டு அடித்து கொடுத்தும் அதனை வைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை’’எனக் கூறினார்.
பின்னர், தகவல் அறிந்த மேயர் இந்திராணி, துணை மேயரிடம் போனில் பேசி, கல்வெட்டு விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டு துணை மேயர் கிளம்பினார்.
-பாலா