'ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகவே இந்த கோர ரயில் விபத்து நடைபெற்றுள்ளது' என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகி உள்ளார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு.
கவாச் என்கிற பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப கருவியை போதுமான அளவு முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை.
இந்திய ஆட்சியாளர்கள், மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதைவிட வெறுப்பு அரசியலை விதைப்பதிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
ரயில்வே துறையை தனியார் மையம் ஆக்குவது என்ற செயல் திட்டம் காரணமாக புதிய பணியாளர்கள் நியமனம் செய்யவில்லை. தேவையான அளவு பணியாளர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் நியமனம் செய்திருந்தால் இப்படி ஒரு கோர ரயில் விபத்து நடக்காமல் தடுத்திருக்க முடியும்.
மிக முக்கியமான அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டிருக்கும் பா.ஜ.க அரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை. அதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது.
எனவே, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறியும் விசாரணை முழுமையாக நடத்த முடியாது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட அளவிலான புலன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.