'மோடி, அமித்ஷா, தான் முக்கியம்' ; அண்ணாமலை "Just like" அவ்வளவு தான் - செல்லூர் ராஜு பளார்

தி.மு.க ஆட்சியில் விலைவாசி ஏற்றம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
'மோடி, அமித்ஷா, தான் முக்கியம்' ; அண்ணாமலை "Just like" அவ்வளவு தான் - செல்லூர் ராஜு பளார்

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., மாநாட்டுக்குத் தமிழக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்க்ஷா பேரணியை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரிக்க்ஷா ஒட்டி வைத்து பேரணியைத் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ஜான்சிராணி பூங்கா அருகே இந்த நிகழ்ச்சி நடத்தக் காரணம், இங்கு தான் எம்.ஜி.ஆர்., மன்றம் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மாநாடும் இங்கு தான் நடத்தியுள்ளார். அதனால் இங்குச் சிறப்பாக இருக்கும் என நிகழ்ச்சி நடத்தினோம். வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் மாநாடு இதற்கு முன்பு நடத்திய மாநாட்டை விட இதற்கு பின்பும் யாரும் நடத்த முடியாத அளவிற்கு இந்த மாநாடு அமையும்.

ஒரு எம்.ஜி.ஆரின் படத்தை மிஞ்ச வேண்டும் என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் படம் தான் வெற்றியை முறியடிக்கும். அது போல் அ.தி.மு.க மாநாட்டை அ.தி.மு.க தான் முறியடிக்கும்.

ஓ.பி.எஸ். குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல. இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது. அ.தி.மு.கவின் கோவிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோவிலுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டால் அவர்களை மிதித்து விட்டுச் சென்று விடுவோம். கொடநாடு வழக்கைத் தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது தி.மு.கவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன?

அண்ணாமலை பா.ஜ.கவின் மாநில தலைவர், "Just like" அவ்வளவு தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா, தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com