மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க மாநாட்டு அழைப்பிதழை வைத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தளமான கோரிப்பாளையம் தர்கா, கிறிஸ்தவர்களின் புனித தளமான சென் மேரீஸ் தேவாலயம் ஆகிய வழிபாட்டுத் தளங்களிலும் அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதுரையில் ஆகஸ்ட் 20 அதிமுகவின் பொன்விழா மாநாடு அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும். மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம். அதிமுக மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 இடங்களில் 300 கவுண்டர்கள் அமைத்து உணவு வழங்கப்படும்.
செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் பதற்றத்துடன் தவித்து வருகிறார்கள். 'வெண்ணெய் தின்ற கண்ணன் வாயைத் திறந்த போது உலகமே தெரிவது' போலச் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் யார் யார் உள்ளே போகப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. குதிரைக்குக் கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10ம் தேதி ரிலீஸ், அ.தி.மு.க மாநாட்டின் மெயின் பிக்சர் 20ம் தேதி நடைபெறுகிறது" என்றார்.