மீண்டும் கொங்கு மன்னர் பதவி ஆசையில் ஆ.ராசா!: வெல்வாரா, வீழ்வாரா?

ஆ.ராசாவோ மீண்டும் கொங்கு மாவட்டங்களில் தன் ஆளுகையை ரீ லாஞ்ச் பண்ணுவதற்கான மும்முரங்களில் முழு தீவிரமாக இருக்கிறார்.
ஆ.ராசா, செந்தில் பாலாஜி
ஆ.ராசா, செந்தில் பாலாஜி

நீலகிரி மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள ஆ.ராசா இந்த வெல்வாரா? அல்லது வீழ்வாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.கவினரிடையே எழுந்துள்ளது.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தனி தொகுதியான பெரம்பலூர் பொது பட்டியலுக்கு மாறியது. அங்கே எம்.பி.யாக இருந்த ஆ.ராசா இனி எங்கே நிற்பார்? எனும் கேள்வி தி.மு.க.வில் எழுந்தது. அவர் டிக் அடித்தது நீலகிரியை, காரணம் அது பொது தொகுதியிலிருந்து தனி பட்டியலுக்கு அதே தேர்தலில் மாறியது. 

ராசாவை நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு அறிமுகம் கிடையாது. ராசாவும் கல்லூரி காலத்தில் ஊட்டிக்கு டூர் வந்திருந்தாரே தவிர, அவருக்கும் மிகப்பெரிய அறிமுகம் அங்கே இல்லை. ஆனால் அவர்தான் வேட்பாளர் என்றதும் ‘ஏன் இந்த தொகுதியில நம்ம கட்சியில தாழ்த்தப்பட்ட நபரே இல்லையா? பெரம்பலூர்ல இருந்துதான் இறக்குமதி பண்ணனுமா?’ என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த திமுகவின் முக்கியமான முகங்கள் சிலர்  ஆதங்கப்பட்டனர். ஆனால் தலைமை ’ராசாவை எம்.பி.யாக்குங்கள்’ என்று இட்ட ஒரு வரி கட்டளைக்காக, ஆதங்கங்களை தூக்கி எறிந்துவிட்டு ஆக்ரோஷமாக களப்பணியில் இறங்கினார்கள். ராசாவை கெத்தாக ஜெயிக்க வைத்தனர். 

விஷய ஞானியான ராசா வெகு சில நாட்களிலேயே நீலகிரி திமுகவை தன் கைக்குள் கொண்டு வந்தார். அம்மாவட்ட திமுகவில்  முபாரக், ராமச்சந்திரன் என்ற இரண்டு முகங்கள்தான் மிக முக்கிய நபர்கள். ஆனால் இருவருக்குள்ளும் நிகழ்வும் யுத்தத்தால் ராசா வெகு விரைவில் அவர்களை தாண்டி அங்கே வளர்ந்து நின்றார். எப்படி என்றால், இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்லி ராசாவிடம் தான் பஞ்சாயத்து வந்து நிற்பார்கள். அதற்கு தீர்ப்பு சொல்வதன் மூலம் இருவரையும் தனது விரலசைவின் கீழே கொண்டு வந்தார் ராசா. 

நீலகிரி மட்டுமல்ல கொஞ்சம் கொஞ்சமாக கோவை, திருப்பூர், ஈரோடு என்று கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான மாவட்டங்கள் முழுவதுமே ராசாவின் கட்டுப்பாட்டினுள் வந்தது. காரணம், இந்த மாவட்டங்கள் எதிலுமே வலுவான மாவட்ட செயலாளர்கள் இல்லை. அதுமட்டுமில்லாமல் 2011 முதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி. இதனால் அதிரடியான தென் தமிழக திமுக நிர்வாகிகளே அடங்கி ஒடுங்கி இருந்த நிலையில் சாஃப்ட்டான கொங்கு திமுக நிர்வாகிகள் எப்படி துள்ளுவார்கள்? விளைவு, கொங்கு திமுகவின் ராஜாவாகவே மாறிப்போனார் ராசா. தலைமைக்கு மிக நெருக்கமான  இடத்தில் அவர் இருந்ததால் மா.செ. மற்றும் மாநில நிர்வாகிகள் பற்றி எந்த புகார் சொன்னாலும் அடுத்த சில நாட்களில் தலைவரின் காதுகளுக்கே போனது. அதற்கு ஆக்‌ஷனும் எடுக்கப்பட்டது. இதனால் ராசாவை கண்டாலே பம்மியது கொங்கு திமுக. 

கிளைச்செயலாளர் பதவி நியமனத்தில் துவங்கி மாவட்ட செயலாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை வரை எல்லாமே ராசாவின் காதுகளுக்கு சென்று, அவரது விசாரணைக்குப் பின் தான் தலைமைக்கு சென்றது. இதனால் கொங்கில் உச்சமாய் இருந்தார் அவர். 

தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகமிருக்கும் மாவட்டங்களில் கொங்கு மாவட்டங்கள் மிக முக்கியமானவரி. இங்கிருக்கும் ஆதிக்க சாதி தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலின ஆளுமையான ராசாவுக்கு நாம் அடங்கிப் போவதா? இதற்கு பேசாமல் அதிமுகவுக்கு போகலாம்! என்றெல்லாம் பைபாஸ் பாலிடிக்ஸ் செய்து அவரது முக்கியத்துவத்தை கட்சியில் குறைக்கப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை. 

இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி, தினகரனின் பாக்கெட்டில் இருந்து தாவி வெளியேறி திமுகவினுள் இணைந்தார். ஆக்சுவலாக செந்தில்பாலாஜி திமுகவினுள் இணையும் முன்பாக அவர்  ஒரு ஏர்போர்ட்டில் ராசாவை சந்தித்து ஓவராக நட்பு மழை பொழிந்த போட்டோக்கள் வெளியாகி வைரலாகின. அதன் பின் தான் அவர் இணைந்தார். 

இந்நிலையில்,  நுழைந்த வேகத்தில் சட்டென்று கரூர் மாவட்ட செயலாளராக டேக் ஆஃப் ஆன செந்தில் அடுத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என்று வளர்ந்து அதற்கடுத்து கொங்கின் தலைநகரான கோவை மாவட்ட பொறுப்பாளராகவே உருவெடுத்தார். அதன் பின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என்று ஐந்து மாவட்டங்களிலும் செந்தில்பாலாஜியின்  கை தான் உயர்ந்து  நின்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது அவர் காட்டிய வேகமும், அவருக்கு தலைமை வழங்கிய சப்போர்ட்டும் செந்தில்பாலாஜியை கொங்கு மண்டலத்தின் அறிவிக்கப்பட்டாத அமைப்புச் செயலாளராக்கியது. 

திமுகவின் தலைவர் ஸ்டாலினை நெருங்கி நின்ற வகையில் ஒரு காலத்தில் ராசாவுக்கு இந்த  மாவட்டங்களின் திமுகவினர் வழங்கிய முக்கியத்துவத்தை இவருக்கு வழங்க துவங்கினர். செந்தில்பாலாஜி  கொங்கின் ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் சாதி ரீதியாக ராசாவை ஒதுக்க நினைத்த கொங்கு திமுகவின் முக்கிய முகங்களுக்கு இது குஷியாகிப் போனது. செந்திலை மிக முழுமையாக வளர்த்துவிட்டனர். 

இந்நிலையில் உச்சம் பறந்த விமானம் சட்டென்று தரைக்குப் பாய்ந்தது போல அமலாக்கத்துறையின் ரெய்டு, கைது மேளாவில் சிக்கி சின்னாபின்னமாகி போய் இருக்கிறார் செந்தில். அவரிடமிருந்த டாஸ்மாக் துறை, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகிய பதவிகள் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முத்துசாமியோ ‘இதெல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்தான். விரைவில் தம்பி செந்தில் பாலாஜி மீண்டு வந்து இந்த பொறுப்புகளை ஏற்பார்’ என்கிறார். 

ஆனால் அதேவேளையில் ஆ.ராசாவோ மீண்டும் கொங்கு மாவட்டங்களில் தன் ஆளுகையை ரீ லாஞ்ச் பண்ணுவதற்கான மும்முரங்களில் முழு தீவிரமாக இருக்கிறார். 

ராசா வெல்வாரா?

-ஷக்தி 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com