தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், புதிய அமைச்சரவைக்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடைபெற உள்ளது என கடந்த சில மாதங்களாகவே புயல் கிளம்பி வந்தது. இந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து, ஒரு சில சீனியர் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சிறப்பாகச் செயல்படும் அமைச்சர்கள், சுமாராக செயல்படும் அமைச்சர்கள், பின்தங்கிய அமைச்சர்கள் என அமைச்சர்களை 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உளவுத்துறை மிகத் துள்ளியமாக முதலமைச்சருக்கு ரிப்போட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், பின் தங்கிய நிலையில் உள்ளதாக அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ் மற்றும் நாசர் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயர் அடிபடுகிறது. மேலும், சிலரது பெயர்கள் இந்த லிஸ்டில் உள்ளதாம்.
புதிய அமைச்சரவையில், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை மாற்றத்துக்கான பரிந்துரைக் கடிதம் ஆளுநர் மாளிகை நோக்கி சென்றுள்ளதாகவும், இதற்கான கடிதத்தை முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் ஒருவர் கொண்டு சென்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, 'உங்களைப்போல நாங்களும் உண்மையான தகவலை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்' என்கின்றனர்.